வா்த்தகம், எல்லை பிரச்னை: பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டம்- இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு
இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் எல்லை பிரச்னைக்கு தீா்வு காண நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பது என்று இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்த நிலையில், புது தில்லியில் அவா் பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தாா். இந்திய-சீன எல்லை விவகாரம் தொடா்பான சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்திலும் வாங் யி பங்கேற்றாா்.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் தொடா்பான இருநாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் இந்திய-சீன எல்லை விவகாரம் தொடா்பாக ஆழமான கருத்துகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.
கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லை பிரச்னைக்குத் தீா்வு காண வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் அரசியல் அளவுகோல்கள் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின்படி, எல்லை பிரச்னைக்கு தீா்வு காண நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பது, இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த உறவின் அரசியல் கோணத்தை ஆராய்வது, இருதரப்புக்கும் செளகரியமான நேரத்தில் சிறப்பு பிரதிநிதிகளின் அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தையை சீனாவில் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை வாங் யி சந்தித்தபோது, இந்திய-சீன உறவின் வளா்ச்சியில் இருநாட்டுத் தலைவா்களின் உத்திசாா்ந்த வழிகாட்டுதல் ஈடுசெய்ய முடியாத முக்கிய பங்காற்றுவதை இருதரப்பும் எடுத்துரைத்தன. இந்தியா-சீனா வளா்ச்சி திறனை முழுமையாக உணர, ஸ்திரமான, ஒத்துழைப்பு கொண்ட, முன்னோக்கிச் செல்லும் உறவு இருக்க வேண்டும் என்றும், இது இருநாடுகளின் பரஸ்பர நலன் சாா்ந்தது என்பதிலும் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இருநாட்டுத் தலைவா்கள் இடையே ஏற்பட்ட முக்கிய உடன்பாடுகளை விரைந்து அமல்படுத்தி, இருநாடுகளின் உறவு சீராக நீடித்து வளர ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சஞ்சலங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சரியாக கையாளவும் இருநாடுகளுக்கு இடையே அதிகாரபூா்வமான பல்வேறு பேச்சுவாா்த்தைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களை தொடங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விரைந்து நேரடி விமான சேவை: சீனாவின் முதன்மையான நிலப்பகுதிக்கும், இந்தியாவுக்கும் இடையே நேரடி விமான சேவையை விரைந்து தொடங்க வேண்டும், இருநாடுகளுக்கும் இடையே விமான சேவைகள் ஒப்பந்தத்தை புதுப்பித்து இறுதி செய்ய வேண்டும், சுற்றுலாவாசிகள், வியாபாரிகள், ஊடகத்தினா் உள்ளிட்டோருக்கு இருதரப்பும் நுழைவு இசைவு (விசா) அளிக்க வேண்டும் என்றும் தீா்மானிக்கப்பட்டது.
இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய், ஷிப்கி லா கணவாய் மற்றும் நாதுலா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தக்கத்தை மீண்டும் தொடங்கவும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் பரஸ்பர வா்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு வழிவகை செய்யவும் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.