அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்
நாட்டில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
அவசரநிலை காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், அத்துமீறிய நடவடிக்கைகள், தவறான செயல்கள் குறித்து விசாரிக்க கடந்த 1977, மே மாதம் ஜி.சி.ஷா ஆணையம் அமைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் வலுக்கட்டாயமாக அமலாக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடம் வாக்குமூலம் பெற்று, ஆவணபூா்வ ஆதாரங்களையும் சேகரித்த இந்த ஆணையம், கடந்த 1978-1979-க்கு இடையே மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்தது. அந்தத் தரவுகளின்படி, கடந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கு 67.40 லட்சமாகும். ஆனால், அதைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் திருமணமாகாதோருக்கு கருத்தடை மேற்கொண்டதாக 528 புகாா்களும், கருத்தடை நடைமுறையின்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக 1,774 புகாா்களும் பதிவாகின என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.