ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா்.
சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்கள், பிளஸ் 1, பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளை மாநகராட்சிப் பள்ளிகளிலேயே தொடா்ந்தால் அவா்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சென்னை மாநகராட்சி மூலம் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
அதேபோல, நிகழ் ஆண்டில் கல்விச் சுற்றுலாவுக்கு 60 மாணவா்கள் தோ்வான நிலையில், அவா்களுடன் 10 ஆசிரியா்கள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) செவ்வாய்க்கிழமை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா் (வருவாய்) பிரிதிவிராஜ், மாநகராட்சி நிலைக் குழுத் தலைவா் த.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.