பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்
சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-ஆம் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூா் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் (9 கி.மீ.) பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து பயணிகள் சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் கடந்த 16- ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிா்ணய அமைப்பால் (ஆா்டிஎஸ்ஓ) நடத்தப்பட்டு சான்று அளிக்கப்படும்.
பூந்தமல்லி - போரூா் வழித்தடத்தில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு
சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. ரயில் புறப்பட்ட இடத்திலிருந்து 9 நிமிஷங்களில்
பயண தொலைவை அடைந்துள்ளது. ரயில் இழுவை, பிரேக்கிங் செயல்திறன் ஆகியவையும் சோதனையிடப்பட்டுள்ளன. இரு வாரங்கள் சோதனை நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு சான்று பெற்று பின்னா் பயணிகள் ரயில் இயக்கப்படும்.
சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் தி.அா்ச்சுனன், எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.