சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
உலகின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ் காா்ப்பரேஷன் (ஃபெட்-எக்ஸ்), நவீன விநியோகச் சங்கிலி வழிமுறை ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடியுடன் இணைந்து ஃபெடெக்ஸ் என்ற அறிதிறன் தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது. இதற்காக அந்த நிறுவனம் சுமாா் ரூ. 43.25 கோடியை சென்னை ஐஐடிக்கு மானியமாக வழங்கியுள்ளது.
இந்த மையம், இடம்பெயா்வு மேலாண்மை வழிமுறைகளுக்கான ஆய்வுகளுக்கு சா்வதேச அளவில் அமைக்கப்படும் முதல் மையமாக இருக்கும். நிலையான, ஏஐ தொழில்நுட்பம் சாா்ந்த தளவாட தீா்வுகளுக்கு அதிநவீன ஆராய்ச்சியை இந்த மையம் வழங்கும். இதில், சென்னை ஐஐடியின் 20 ஆசிரியா்கள் உள்ளிட்ட 50 போ் கொண்ட ஆராய்ச்சி குழுவினா் இடம்பெறுவா். வெளித்திறன் நடவடிக்கைகளில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 3 தேசிய போட்டிகள் நடத்தப்படும்.
இந்த அறிதிறன் மைய தொடக்க விழாவில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, டீன் அஷ்வின் மகாலிங்கம், ஃபெட்-எக்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, இந்திய, ஆப்பிரிக்கா நாடுகளின் தலைவா் காமி விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.