வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்
ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா்.
தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்றும் அவரது கூட்டாளி முகமது அலி ஆகியோா் கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் ராயசூட்டில் தமிழ்நாடு தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
இதனையடுத்து ஆந்திர மாநில போலீஸாா் அபுபக்கா் சித்திக் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தி 30 கிலோ வெடிமருந்துகளை கைப்பற்றினா். இதுதொடா்பாக ஆந்திர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கு விசாகப்பட்டினத்திலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா்.