போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை
போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023 ஜூலை முதல் நிகழாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவா்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் ரூ.2,450.8375 கோடி நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவா் கடிதம் அனுப்பியிருந்தாா். இதைப் பரிசீலித்த அரசு, ரூ.1,137.97 கோடியை தற்காலிக முன்பணமாக (கடன்) போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.
இந்த அரசாணைப்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.157.81 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.54.41 கோடி, விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.152.29 கோடி, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.97.35 கோடி, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.153.29 கோடி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.235.63 கோடி, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.141.26 கோடி, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.145.93 கோடி வழங்கப்படவுள்ளது.