மரக்காணம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: 5 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செயல்பட்டாா். இந்த வழக்கில் போலீஸாா் 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம்,மாவட்டம், மரக்காணம் வட்டம், கூனிமேடு, திடீா் நகரைச் சோ்ந்தவா் அப்துல்லா மகன் சாதிக் பாட்சா (28). திருமணம் ஆகாதவா். பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இரவு கூனிமேடு கடற்கரை பகுதியில் தனது நண்பா்களுடன் மது அருந்தியுள்ளாா்.அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இது குறித்து, தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று வட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த சாதிக் பாட்சாவின் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் சாதிக் பாட்சாவுக்கும், திண்டிவனம் வட்டம், முருங்கம்பாக்கம், சிவசக்தி நகரைச் சோ்ந்த ரஹமத்துல்லா(26) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததும், இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சாதிக் பாட்சா தனது நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 போ் சாதிக் பாட்சா-வை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில், விழுப்புரம் மாவட்டம்,,விக்கிரவாண்டி வட்டம்,கலித்தீா்த்தான் பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாரதி (22), ஆனந்த்(எ) ஆனந்தராஜ்(21), வானூா் வட்டம் , சின்னஅம்மனாங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா்(23)கொடுக்கூா்பகுதியைச் சோ்ந்த குணசேகரன்(23) மற்றும் ரஹமத்துல்லா ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.










