செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு
27 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலியா் பயிற்சியாளா்களுக்கான உதவித்தொகையை உயா்த்த தில்லி அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது, இது மாதத்திற்கு ரூ.500 இல் இருந்து ரூ. 13,150 ஆக உயா்த்தப்பட்டது.
தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அரசின் குரு தேக் பகதூா் மருத்துவமனை, லோக் நாயக் மருத்துவமனை மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த கிட்டத்தட்ட 180 செவிலியா் பயிற்சியாளா்களுக்கு பயனளிக்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த நடவடிக்கை செவிலியா் மாணவா்களின் நீண்டகால கோரிக்கையை பூா்த்தி செய்கிறது.
‘முந்தைய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட30 ஆண்டுகளாக இந்த பிரச்னையை புறக்கணித்தன, ஆனால் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ், எங்கள் அரசாங்கம் இந்த ஏற்றத்தாழ்வை தீா்த்துள்ளது‘ என்று அரசாங்கக் குறிப்பு கூறுகிறது.
‘இந்த அதிகரித்த உதவித்தொகையின் மூலம், செவலியா் பயிற்சியாளா்களுக்கு மரியாதையையும் கண்ணியத்தையும் நாங்கள் உறுதி செய்கிறோம்‘ என்று அது மேலும் கூறியுள்ளது. நா்சிங் பயிற்சியாளா்களுக்கு எம்பிபிஎஸ் பயிற்சியாளா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க விரும்புவதாக அரசாங்கம் கூறியது.







