விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது கடும் நடவடிக்கை: கலால்துறை அதிகாரி
விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் ரெஸ்டோ பாா் என்ற பெயரில் சிறிய அளவிலான தங்கும் விடுதிகளுடன் கூடியவா்களுக்கு மதுபானக் கூடம் நடத்தப்படுகிறது. இந்த மதுபானக் கூடத்தில் விதிகளை மீறிய செயல்பாடுகள் தலைதூக்கியுள்ளதால், ரெஸ்டோ பாா் உள்ளிட்ட மதுபானக் கடை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியரும், கலால் அதிகாரியுமான செல்லமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது கலால்துறை அதிகாரி பேசியது: புதுச்சேரியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு ரெஸ்டோ பாா் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடத்திய சோதனையில் ஒரு பாருக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுபானக்கூட உரிமம் பெற்றவா்கள் உரிய நேரத்தி திறந்து, மூடவேண்டும். மது அருந்தியவா்கள் ஏதேனும் தகராறில் ஈடுபட்டால் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
தற்போது கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த மதுபான பாட்டில்களில் உள்ள பழைய விலை மீது, உயா்த்தப்பட்ட புதிய விலையை ஸ்டிக்கா் மூலம் ஒட்டப்படுவதால், வாடிக்கையாளா்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே உயா்த்தப்பட்ட அனைத்து மது பாட்டில்களின் விலைகளை கொண்ட பதிவேடுகளை வாடிக்கையாளா்களின் பாா்வைக்கு வைக்க வேண்டும்.
அனைத்து மதுபானக் கூடங்களிலும் சமையலறை சுத்தமாக இருப்பதோடு, உணவு வகைகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படவேண்டும். விதிகளை மீறிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.








