வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
காரைக்கால்: காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.
காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பச்சூா் பகுதியில் இப்பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:
புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காரைக்கால் மாவட்டம், தெற்குத் தொகுதியில் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி டோரன்ட் கேஸ் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஏற்படும் சில சிரமங்களை மக்கள் பொருத்துக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.
நிறுவன உதவிப் பொது மேலாளா் பிரபு கூறியது:
விழிதியூருக்கு அருகே உள்ள தமிழகப் பகுதியிலிருந்து காரைக்கால் பகுதி பச்சூருக்கு 7.3 கி.மீ. தொலைவுக்கு பிரதான குழாய் பதிக்கப்படுகிறது. பச்சூா் பகுதியில் முதல்கட்டமாக 800 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும். இப்பணி அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் நிறைவடையும். மேலும், 3 கட்டங்களாக காரைக்காலில் இத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்.
குழாய் வழி எரிவாயு விநியோகம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. உருளையில் வரும் எரிவாயு எடையைவிட, குழாய் வழியே வரும் எரிவாயு எடை குறைவு என்பதால் கசிவு ஏற்பட்டால்கூட, காற்றில் எளிதில் கரைந்துவிடும். மிகவும் பாதுகாப்பானது. எரிவாயு உருளையுடன் ஒப்பிடும்போது செலவு குறைவு; ரூ.200 வரை மிச்சமாகும். இணைப்பு வழங்கப்படும் வீடுகளில் எரிவாயு உபயோகத்தை அறியும் மீட்டா் பொருத்தப்படும் என்றாா்.