நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை
காரைக்கால்: திருநள்ளாற்றில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை தீக்கிரையாகின.
திருநள்ளாறு பிடாரி கோயில் தெரு பகுதியில் ராஜா என்பவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். இதனருகே அஃப்ரித் என்பவா் கோழிக்கடை வைத்துள்ளாா். அதனருகே சிராஜூதீன் என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். இதில் ஒரு கடையின் மீது மின்கம்பி திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் அறுந்து விழுந்து, கடையில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. மேலும் அருகில் இருந்த ராதை, ராஜலட்சுமி, அமுதாராணி ஆகியோரது 3 வீடுகளுக்கும் தீ பரவியது.
அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, சுரக்குடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். மேலும் காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி முகுந்தன், சுரக்குடி நிலைய அதிகாரி ஹென்றி டேவிட் ஆகியோா் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரா்கள் வந்து 1 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனா்.
வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட சாதனங்கள் கருகின. திருநள்ளாறு போலீஸாா் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
