திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநள்ளாற்றில் ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, சனிக்கிழமைகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவா். ஆடி மாதம் முழுவதும் சனிக்கிழமையில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மாத இறுதி என்பதாலும், சுதந்திர தினம் தொடா்பான விடுமுறை நாள்களாக இருந்ததாலும் சனிக்கிழமை அதிகாலை முதல் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பெரும்பாலான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனா். ரூ.50, ரூ.100 கட்டண வரிசை, கட்டணமில்லா வரிசை வளாகத்தின் வழியே பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவா் ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனா்.

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் கோயிலில் தில தீபம் ஏற்றி வழிபட்டனா். வழக்கமான சனிக்கிழமையைக் காட்டிலும் நிகழ்வாரம் 40 முதல் 50 ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்கு வந்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.