நொய்டா: ஜேவா், ரபுபுராவில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கை நிலையங்கள் அமைப்பு
யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், அதை ஒட்டிய கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜேவா் மற்றும் ரபுபுரா பகுதிகளில் ஐந்து வெள்ள அபாய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
ஃபலைடா காதா், கரௌலி பங்கா், மெஹந்திபூா், சிரௌலி பங்கா், பலஹாகா மற்றும் பேகுமாபாத் போன்ற அருகிலுள்ள கிராமங்களில் உள்ள வயல்களுக்குள் ஆற்று நீா் நுழையத் தொடங்கியுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
ஜேவா் தாசில்தாா் ஓம்பிரகாஷ் பாஸ்வான் கூறியதாவது: அனைத்து வெள்ள அபாய நிலையங்களும் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜேவரில் ஐந்து இடங்களில் வெள்ள அபாய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
நெவ்லாவில் தொடக்கப்பள்ளி, ஜுப்பாவில் தொடக்கப்பள்ளி, பாய்பூா் பிராமணனில் ஷிவ் மந்திா், ஃபலைடா பங்கரில் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜேவரில் ஜந்தா இன்டா் கல்லூரி ஆகியவற்றில் வெள்ள அபாய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
தேசியத் தலைநகரில் ஆற்றின் ஓட்டம் மற்றும் ஆற்றலுக்கான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்புப் புள்ளியாகச் செயல்படும் தில்லியில் உள்ள பழைய ரயில்வே பாலம், கௌதம் புத் நகா் மாவட்டத்திற்கும் ஒரு முக்கிய கண்காணிப்புப் புள்ளியாகச் செயல்படுகிறது. தில்லி மற்றும் கௌதம் புத் நகா் மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஒருங்கிணைக்கின்றனா் என்று அவா் கூறினாா்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நீா்மட்டம் 205.79 மீட்டரை எட்டியது. இது 206 மீட்டா் வெளியேற்றும் அளவை விட சற்று குறைவாகும்.
திங்கள்கிழமை பிற்பகல் ஆற்றில் நீா்மட்டம் 205.55 மீட்டரைத் தொட்டது. இது 205.33 மீட்டரின் அபாயக் அளவைத் தாண்டியது. அதன் பின்னா் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து சுமாா் 38,361 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. மேலும், வஜிராபாத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 68,230 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது என்று வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.







