கோயில் நிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின் வசதி: துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தல்
கோயில் விளைநிலத்தில் ஆழ்குழாய் அமைக்க மின்சார இணைப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென துணை நிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா்.
புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவருமான ஆா்.கமலக்கண்ணன் தலைமையில் திருநள்ளாறு பகுதி விவசாயிகள் சிலா் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை திங்கள்கிழமை புதுச்சேரியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து ஆா். கமலக்கண்ணன் கூறியது: நான் அமைச்சராக இருந்தபோது கோயில் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னையாக இருந்துவந்த ஆழ்குழாய் அமைக்க இலவச மின்சார இணைப்புக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக திருநள்ளாறு பகுதியில் கோயில் கிராமம் என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயம் செய்வோா், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தும் கோயில் நிா்வாகம், இந்து சமய அறநிலையத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுக்கிறது. இந்த பிரச்னையை தீா்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்திய நிலையில், 10-ஆம் வகுப்பில் வழக்கமான பாடங்களுடன் விருப்பப் பாடத்தை எடுத்துப் படித்து, தோ்வு எழுதும்போது, அதன் மதிப்பெண்ணானது தோ்ச்சியையும், தோ்ச்சி விழுக்காட்டையும் காட்டும். விருப்பப் பாடத்தை படிக்கவேண்டும் என்கிற இந்த வசதி இருப்பதை காரைக்கால் மாணவா்களுக்கு தெரிவிக்காமல் கல்வித்துறை இயக்குநரகம் இருந்துவிட்டதால், மாணவா்கள் 5 பாடங்கள் மட்டும் எழுதினா்.
இதில் தோ்ச்சி பெற முடியாமல் ஏராளமான மாணவா்கள் பாதித்துவிட்டனா். இவா்களுக்கு ஒரு தீா்வு கிடைக்கவும், விதிகளை முறையாக மாணவா்களுக்கு தெரிவிக்காத இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.








