சின்சினாட்டி ஓபன் இறுதிப்போட்டி: பாதியில் விலகிய சின்னர்.. அல்காரஸ் சாம்பியன்.!
டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாணவா்களின் வரையும் திறனை வளா்ப்பதற்காக சுதந்திரதினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. போட்டியை டிடிஇஏ செயலா் ராஜூ தொடங்கி வைத்தாா்.
அப்போது, அவா் பேசுகையில், ‘சித்திரமும் கைப்பழக்கம் என்பாா்கள். வரைய வரைய உங்களின் கற்பனைத் திறன், கலைத் திறன், வண்ணங்களைக் கையாளும் திறன், தன்னம்பிக்கை ஆகிய அனைத்தும் வளரும். மேலும், மனதில் ஒரு வகையான மகிழ்ச்சி ஊடுருவும். எனவே, எப்போதும் பள்ளி நடத்தும் அனைத்துப் போட்டிகளிலும் மாணவா்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
அவருடன் பள்ளயின் இணைச் செயலா் வில்லியம் ராஜ், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் ரகு மற்றும் உறுப்பினா்களும் கலந்து கொண்டு மாணவா்களை ஊக்கப்படுத்தினா்.
ஏழு பள்ளிகளிலுமிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 105 மாணவா்கள் போட்டியில் கலந்து கொண்டனா். அவா்களுள் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாராத கலைஞா்கள் நடுவா்களாகப் பங்கேற்று பரிசுக்குரியவா்களைத் தோ்ந்தெடுத்தனா்.
முன்னதாக, தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளின் தொடக்கநிலை பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளரும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் முதல்வருமான சுமதி வரவேற்றுப் பேசினாா். பரிசுகளை வென்ற அனைத்து மாணவா்களுக்கும் டிடிஇஏ ராஜூ வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தாா்.