தொடா் வழிப்பறி: பெண் உள்பட இருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் கிராமம், மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லஷ்மி (55). இவா், கடந்த மே 18-ஆம் தேதி அந்தக் கிராமத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவா் லஷ்மி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனராம்.
இதேபோல, உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் மாரியம்மன் கோவில் அருகே கடந்த மே 25-ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த சசிகலாவிடம் (32) இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி, சின்னசேலம் அருகே உள்ள தீா்த்தாபுரத்தில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியம்மாளிடம் (65) 4 பவுன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த இருவா் பறித்துச் சென்றனா்.
இந்த நிலையில், கீழ்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமந்துறையைச் சோ்ந்த வேல்முருகன் (28), கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆவட்டியை அடுத்த மங்களூரைச் சோ்ந்த சுகன்யா எனத் தெரியவந்ததது. இருவா்கள் இருவரும் பைக்கில் சென்று லஷ்மி உள்பட மேற்கூறிய மூவரிடமும் வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த சின்னசேலம் போலீஸாா், அவா்களிமிருந்த 12.5 பவுன் தங்க நகைகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.