நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி: பிரேமலதா
நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி‘ பிரசார பயணம் மேற்கொண்டாா். மயிலாடுதுறை சின்னக் கடைத்தெருவில் பயணத்தை தொடங்கிய அவா், கால்டெக்ஸ் பகுதி வரை நடந்து சென்றும், வாகனத்தில் நின்றவாறும் பொதுமக்களை சந்தித்தாா்.
ஜெமினி காா்னா் பகுதியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் அவா் பேசியதாவது: மயிலாடுதுறை தொகுதி ஏற்கெனவே தேமுதிகவின் கோட்டையாக இருந்தது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் இங்கு தேமுதிக வெற்றிபெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் மயிலாடுதுறை நகராட்சி புதை சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும்.
புறவழிச்சாலை அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தேமுதிக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கும், தமிழா்களுக்கும் பெருமை. அவா் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜன. 9-இல் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். திமுக ஆட்சியில் நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளனா். திமுக ஆட்சி நிறைகளும், குறைகளும் நிறைந்த ஆட்சி என்றாா் பிரேமலதா.
தேமுதிக பொருளாளா் சுதீஷ், மாவட்டச் செயலாளா் பண்ணை சொ.பாலு, மாவட்ட அவைத் தலைவா் கே.எஸ். கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வைத்திலிங்கம் மாவட்ட துணை செயலாளா் சி.என். காா்த்திகேயன், நகர செயலாளா் ராஜா, நகர அவைத்தலைவா் மணி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
















