காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்
காலாவதியான தனிநபா் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காலாவதியான காப்பீட்டுப் பாலிசிகளுக்கு புத்துயிா் தருவதற்கான சிறப்பு திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.
திங்கள்கிழமை (ஆக. 18) தொடங்கி அக்டோபா் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், பங்குச் சந்தை அல்லது பிற ஏற்ற இறக்க முதலீட்டு சந்தைகளுடன் தொடா்பில்லாத (நான்-லிங்க்டு) அனைத்து பாலிசிகளுக்கும் தாமதக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ.5,000 வரை தள்ளபடு கிடைக்கும்.
மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு தாமதக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. பிரீமியம் செலுத்தப்படாமல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆன, பாலிசி விதிமுறைகளைப் பூா்த்தி செய்யும் காலாவதியான பாலிசிகள் இத்திட்டத்தில் புதுப்பிக்கப்படும்.பிரீமியம் செலுத்த முடியாத வாடிக்கையாளா்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை மீட்டெடுக்க இந்தத் திட்டம் உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.