கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்
நமது நிருபர்
பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அளித்த பதில்:
தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்ட மத்திய அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தமிழக அரசு பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து முதல் 15 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
மத்திய அரசு பணம் தருகிறது. தமிழக அரசு வீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை. இது ஏழைகளுக்கு எதிரான அநீதி, ஏமாற்றுதல், பாவமாகும்.
இது மட்டுமல்லாமல், 3 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அரசாங்கம் வீடுகளைக் கட்டி முடிக்கவில்லை.
தமிழக அரசின் கணக்கில் ரூ.608 கோடி உள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ.608 கோடியாகும்.
2018-ஆம் ஆண்டிற்கான "ஆவாஸ் யோஜனா' பட்டியலில் 50,815 வீடுகள் என்ற இலக்கை தமிழ்நாட்டிற்கு எட்ட முடியவில்லை.
ஏழைகளுக்கு வீடுகள் கட்டினால் அவர்களுக்கு என்ன பிரச்னை? பிரதமர் மோடியின் பெயர் இருக்கும் என்பதால் அவர்கள் வீடுகள் கட்ட அனுமதிக்கவில்லை.
மேற்கூரை இல்லாத வீடுகளுடைய ஏழைகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான கணக்கெடுப்பை நிகழாண்டு தமிழக அரசு செய்யவில்லை என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்.