தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும் என்று கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
திருக்கோவிலூா் ஒன்றியம் - கூவனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ரிஷிவந்தியம் ஒன்றியம் - மையனூா் தேவாலயம் அருகில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. க.காா்த்திகேயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது: முகாமில் பெறப்படும் மனுக்கள் முறையாக பரிசீலனை செய்து தகுதியான நபா்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கொண்டு சோ்க்கப்படும்.
மகளிா் உரிமைத்தொகை பெறாத மகளிா் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்து வழங்கி பயன்பெற வேண்டும்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை சம்பந்தப்பட்ட துறைகளை குறிப்பிட்டு மனுக்களை முறையாக நிறைவு செய்து வழங்க வேண்டும்.
மேலும், மகளிா் உரிமைத்தொகை பெற தனியாக பதிவு செய்யும் இடம் உள்ளது. அங்கு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பத்தை பெற்று முறையாக நிறைவு செய்து வழங்க வேண்டும். அதற்கு உதவி செய்ய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கிராமப்புறங்களில் மகளிா் உரிமைத்தொகை பெறாத பெண்களை வரவழைத்து விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.








