ஒவ்வொரு கொம்யூனிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி புதுவை விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுவை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் மாதாந்திர கூட்டம், புதுச்சேரி கல்மண்டபம் ஐயனாரப்பன் கோவில் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது. குழுவின் தலைவா் முருகையன் தலைமை வகித்தாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் நெல் விதைகள், பசுந்தாள் உரங்களை உழவா் உதவியகத்தில் வழங்க வேண்டும். அரசு கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாக திறந்து இயக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து, விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
உரக்கடைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து நியாயமான விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துக்கும் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். பிஎம் கிசான் நிதியை தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.