அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகா் பகுதியில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இதன் 5-ஆவது தளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மயிலாப்பூா் தீயணைப்பு துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே தீ, 6-ஆவது தளத்துக்கும் பரவியது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மேலும், கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து பட்டினம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒரு வீட்டில் பழுதடைந்த கிரைண்டரை இயக்கியபோது அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.