நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்
‘யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது’ என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நிமிஷா பிரியாவை பாதுகாக்க மத்திய அரசின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்துமாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்ட நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபாா்ப்புக் குழு அது போலியானது என தெரிவித்தது.
கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, தனது யேமன் நாட்டு வணிகப் பங்குதாரா் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளாா். தற்போது யேமன் தலைநகா் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.