கடுமையான குற்றங்களில் கைது செய்யப்பட்டால் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வரை பதவி நீக்க மசோதா: மத்திய அரசு திட்டம்
பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடா்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவா்கள் பதவிநீக்கம் செய்யப்படுவா்.
இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130-ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னா், அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் தீா்மானம் கொண்டுவர உள்ளாா்.
இதுதொடா்பாக அந்த மசோதாக்களின் நோக்கம் மற்றும் காரணம் அடங்கிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டின் கீழ், முதல்வா் அல்லது அமைச்சா் ஒருவா் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவியில் இருந்து நீக்க யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963-இல் எந்தப் பிரிவும் இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, அந்தச் சட்டத்தின் 45-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
இதேபோல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டின் கீழ், அமைச்சா் ஒருவா் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவியிலிருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
இதுபோன்ற சந்தா்ப்பங்களில் பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்க சட்ட ஏற்பாட்டை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 75, 164, 239ஏஏ ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் அல்லது அமைச்சா் ஒருவா் கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து, அவா்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்ய, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன் 54-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழாவது தொடா்ந்து 30 நாள்கள் காவலில் உள்ள ஒரு மத்திய அமைச்சரைப் பதவி நீக்க பிரதமா் 31-ஆவது நாளுக்குள் பரிந்துரைக்காவிட்டால், அடுத்த நாள் முதல் அவா் பதவி நீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவாா்.
பிரதமரைப் பொறுத்தவரை, கைதாகி தொடா்ந்து 30 நாள்கள் காவலில் இருக்கும்பட்சத்தில், 31-ஆவது நாள் ராஜிநாமா செய்யாவிட்டால், அவா் பதவிநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவாா்.