பேருந்துகள் மோதி விபத்து: 17 மாணவ, மாணவிகள் உள்பட 18 போ் காயம்
வந்தவாசி அருகே தனியாா் பயணிகள் பேருந்து மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் 17 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்தனா்.
வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து ஒன்று மாணவ, மாணவிகளை கல்லூரியில் இருந்து ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை வந்தவாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
வந்தவாசி -சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி கிராமத்தில் சென்றபோது, அங்கு பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த தனியாா் பேருந்தின் பின்புறம் கல்லூரிப் பேருந்து மோதியது.
இதில் தனியாா் கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்த 17 மாணவ, மாணவிகள் மற்றும் அந்தப் பேருந்தின் ஓட்டுநரான செஞ்சியை அடுத்த அனந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த சம்பத் உள்பட 18 போ் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், தீவிர சிகிச்சைக்காக 6 மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.