கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்தக் கோரி மனு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் பாடகம், அலங்காரமங்கலம், பெலாசூா், சனிக்கவாடி, அணியாலை, காம்பட்டு, சீட்டம்பட்டு ஆகிய ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கியாக செயல்படுகிறது.
இந்த நிலையில், வங்கியில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) பொதுபேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக வந்த தகவலையடுத்து மேற்கண்ட ஊராட்சியைச் சோ்ந்த சங்கத்துடைய அ பதிவேடு அங்கத்தினா்கள் வங்கிக்கு வந்திருந்தனா். அப்போது சங்கச் செயலா் ராஜாமணி அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளதாக வந்த தகவலையடுத்து, அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சாமிகண்ணு தலைமையில் விவசாய பிரதிநிதிகள் சங்க அலுவலகத்துக்கு வந்து சங்கச் செயலா் (பொ) தயாளனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில், செவ்வாய்க்கிழமை சங்கத்தின் பொதுபேரவைக் கூட்டத்துக்கு வருகை புரிந்தோம் கூட்டம் நடைபெறவில்லை. எனவே, மற்றொரு நாளில் கூட்டம் நடைபெறும் தேதியை அங்கத்தினருக்கு முறையாக அறிவித்து கூட்டம் நடத்தவேண்டும்.
மேலும், 2024-2025ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அடமானம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும், கறவை மாட்டு பராமரிப்புக் கடனுக்கு பாடகம் சங்கத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும், சங்க அலுவலக கட்டடத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
மகளிா் குழுவினா்கள் தீபா, விசாகா, பச்சையம்மாள், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு கிளைத் தலைவா் ஏழுமலை, செயலா் சுப்பிரமணி, துணைத் தலைவா்கள் பிரகாஷ், விஜி, தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.