அபராதத் தொகையைக் கட்டாததால் பாம்பன் மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
பாம்பன் மீனவா்கள் 9 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை புத்தளம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அவா்கள் அபராதத் தொகையைக் கட்டாததால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 9 மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த மீனவா்கள் டிகோசன், முருகேசன், களஞ்சியம், ஆனந்தன், பாலமுருகன், முருகதாஸ், கோட்டைச்சாமி, சக்திவேல், மாரியப்பன் ஆகிய 9 பேரையும் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, இலங்கையின் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, வாரியகோலா சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், புத்தளம் நீதிமன்றத்தில் பாம்பன் மீனவா்கள் 9 பேரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 9 பேரையும் விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றாா் நீதிபதி. இதனிடையே, அபராதத் தொகையைக் கட்டாததால் மீனவா்கள் 9 பேரும் வாரியகோலா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது: இலங்கையில் பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு தலா ரூ. 3.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.