Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் ...
எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம்: ஏர்டெல், ஜியோ பங்குகள் உயர்வு!
ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணைய சேவையை இந்தியாவுக்குள் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.
தற்போது முதல் நிறுவனமாக ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியானதனைத் தொடர்ந்து, ஜியோவும் ஸ்டார்லிங்கின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இரு நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. தேசியப் பங்குச்சந்தையில் ஏர்டெல்லின் பங்கு விலை 5.49 சதவிகிதம் உயர்ந்து, ரூ. 1,388.25-ஆக அதிகரித்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தையில் 0.49 சதவிகிதம் சரிவுடன் ரூ. 1,653.05-ஆக மாறியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகளும், தேசியப் பங்குச்சந்தையில் ரூ. 1,242.50 என்ற நிலையிலிருந்து, 1.3 சதவீதம் உயர்ந்து ரூ. 1,263-ஆக அதிகரித்தது. மும்பை பங்குச்சந்தையில் 1.13 சதவிகிதம் உயர்ந்து, ரூ. 1,261.55 என்பதிலிருந்து ரூ. 1,242.50-ஆக மாறியது.
இதனிடையே, டிசம்பர் மாதம் 17.15 லட்சம் சந்தாதாரர்களை இழந்த வோடபோன் ஐடியாவின் பங்குகள், புதன்கிழமை பங்குச் சந்தையில் 6 சதவிகிதம் சரிந்தன.
இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த நவம்பரில் 1,187.15 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து, டிசம்பரில் 1,189.92 மில்லியனாக அதிகரித்ததாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்தது.
அவற்றில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 476.58 மில்லியன் பிராட்பேன்ட் சந்தாதாரர்களுடன் முன்னிலையிலும், அதனைத் தொடர்ந்து ஏர்டெல் 289.31 மில்லியன் சந்ததாரர்களுடனும், வோடபோன் ஐடியா 126.38 மில்லியன் சந்தாதாரர்களையும் பெற்றுள்ளனர்.