எல்லா மருந்துச் சீட்டுகளிலும் இடம்பெறும் ``RX'' என்ற வார்த்தை.. மருத்துவர்கள் எழுதுவது ஏன்?
மருத்துவர்களின் எழுத்து மொழி பெரும்பாலும் நமக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கும். குறிப்பாக நோயுற்ற நபர்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் உள்ள சுருக்கெழுத்து நமக்கு புரியாத புதிராக இருக்கும்.
நன்றாக கவனித்தால் அந்த மருந்து சீட்டுகளின் முதல் எழுத்தாக RX என்ற வார்த்தை இருக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் இவ்வாறு எழுத காரணம் என்ன? RX பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

RX என்ற வார்த்தையானது லத்தின் வார்த்தையான Recipre இருந்து பெறப்பட்டது. இதன் அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை குறிப்பதாகும்.
அதாவது ஒரு மருத்துவர் மருந்துச் சீட்டை கொடுக்கும் போது இந்த மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை கூறும் விதமாக RX என்ற வார்த்தையினை தங்கள் மருத்துவச் சீட்டில் குறிப்பிடுகிறார்கள் அல்லது மருத்துவர் ஒரு பரிந்துரையை எழுதினால், அந்த சீட்டு மருந்தாளுநருக்குச் சென்று, அந்த மருந்தை நோயாளிக்கு வழங்குவதை குறிப்பிடுவதாகும்.

அதே சமயம் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் RX குறித்து பண்டைய எகிப்து புராணங்களோடு ஒப்பிட்டுள்ளனர்.
எகிப்து கடவுளான ஹோரர்ஸ் போரில் தனது கண்ணை இழக்கிறார். அப்போது அவரது தாய் ஐசிஸ் தெய்வங்களிடம் வேண்டிமீண்டும் ஹோரசிற்கு கண் பார்வை கிடைக்கச் செய்கின்றார்.
அதன் பிறகு ஹோரஸின் கண் மனிதர்களின் பாதுகாப்பு அடையாளமாக மாறியது காலப்போக்கில் அதன் சின்னம்தான் RX அடையாளம் என்றும் இதுதான் பின்னர் மருத்துவ உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.