பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு
எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல்: இந்தியா பதிலடி!
சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி கடும் தாக்குதலைத் தொடுத்தனா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி புதன்கிழமையும் இடைவிடாமல் நீடித்த இத்தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 12 பேரும் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியதால் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
குப்வாரா, பாரமுல்லா, ஊரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எல்லையோர கிராமங்களில் உள்ள மக்களைக் குறிவைத்து அவர்களின் வீடுகள் மீது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.