ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!
ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் கடந்த ஏப். 19-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், பயணிகளின் வசதிக்கேற்ப மே 2-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த அட்டவணைப்படி, தாம்பரத்தில் காலை 6.50-க்கும், செங்கல்பட்டிலிருந்து காலை 7.50, இரவு 8.10-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.41, மாலை 6.17-க்கும் புறப்படும் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாது.
அதுபோல், தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1 மணிக்கும், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 2.30-க்கும், செங்கல்பட்டிலிருந்து மாலை 4.30-க்கும் புறப்படும் ரயில்கள் சனிக்கிழமை மட்டும் இயக்கப்படாது.
எனினும் வார இறுதி நாள்களில் மாலை நேரத்தில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருப்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக இரு சேவைகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு சனிக்கிழமை மாலை 5.10-க்கு ஏசி மின்சார ரயில் (எண் 49010) இயக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.17-க்கு ஏசி மின்சார ரயில் (எண் 49009) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.