ஏ. ஆர். முருகதாஸ் சந்தர்ப்பவாதி! விளாசும் சல்மான் கான் ரசிகர்கள்!
நடிகர் சல்மான் கானின் ரசிகர்கள் ஏ. ஆர். முருகதாஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகிய திரைப்படங்கள் தோல்விப் படங்களாகின.
தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், அண்மையில் நேர்காணலில் பேசிய ஏ. ஆர். முருகதாஸ், “சிக்கந்தர் தோல்விக்குக் காரணம் சல்மான் கான்தான். அவரின் உயிருக்கு அச்சுறுத்துதல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், சிஜியில் (கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்) எடுத்தால் எப்படி இருக்கும்?
ஒவ்வொரு இரவிலும் பகலுக்கான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதிலும் சல்மான் கான் தாமதமாகத்தான் வருவார். இன்னும் சொன்னால், பிறர் வருந்துவதுபோல் ஆகிவிடும்” எனப் பேசியிருந்தார்.
இதனைக் கேட்ட சல்மான் கான் ரசிகர்கள் ஏ. ஆர். முருகதாஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, ”படத்தின் வெளியீட்டிற்கு முன்பு சல்மான் கானைப் புகழ்ந்து பேசிவிட்டு, தோல்வியடைந்ததும் பழிபோடுகிறார். உண்மையில், ஏ. ஆர். முருகதாஸ் பெரிய சந்தர்ப்பவாதி” என வார்த்தைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!