பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
தஞ்சாவூர் அருகேயுள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்க கோவிலூர் பகுதியில் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று கடந்த 19 ஆம் தேதி கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று மேள, தாளங்களுடன் இடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,ஆலயத்தின் கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.