ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை
ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதினா ஒரு கட்டு ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கட்டு புதினா ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஒசூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி, புதினா, பல்வேறு வகையான கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறோம். புதினா ஒரு முறை நடவு செய்தால், 4 ஆண்டுகள்வரை மகசூல் கிடைக்கும். இதனால் புதினா சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.
ஒசூா் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்ததால், அப்பகுதி விவசாயிகளும் புதினா சாகுபடி செய்தனா். இதனால் விளைச்சல் அதிகரித்து வெளியூா் வியாபாரிகள் வரத்து குறையத் தொடங்கியதால், புதினா விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இதுபோன்ற இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒசூா் பகுதியில் புதினாவை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.