ஒசூரில் பூக்கள் விலை குறைவு: விவசாயிகள் கவலை
ஒசூா் பகுதியில் விளையும் பூக்களின் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பசுமைக் குடில் மற்றும் திறந்தவெளியில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மலா் சாகுபடி செய்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கா்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
இந்நிலையில், கடந்த மாதம் காா்த்திகை மாத விழா, திருமணங்களையொட்டி சாமந்தி பூக்களின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மாா்கழி மாதத்தில் எந்தவித சுப நிகழ்வுகளும் செய்யப்படாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் ஒசூா், ராயக்கோட்டை மலா் சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். அதனால், ஒரு கிலோ சாமந்தி ரூ. 20 முதல் ரூ. 70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மலா் சந்தைக்கு வெளியூா் வியாபாரிகள் வராததால், உள்ளூா் சில்லரை வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனா். தை மாதம் வரை பூக்களின் விலை உயராது என்பதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.