`ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' - டெல்லி தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலை கவிழ்த்த மதுபானக் கொள்கை!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2015, 2025ம் ஆண்டுகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து அடுத்தடுத்து அமோக வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெறும் 24 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் பா.ஜ.க 46 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திணறியது. ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற முயலும் போது அதற்கு பா.ஜ.க முட்டுக்கட்டை போடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் நிறைவேற்றாத வாக்குறுதிகள், டெல்லி காற்று மாசு போன்றவை மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/ubcmjku2/20250130061736Arvind-Kejriwal-Delhi-Election-2025.avif)
நலத்திட்டங்களை செயல்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தடையாக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டினாலும் அது வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் இருப்பதற்கு கூறப்படும் காரணங்களாகவே மக்கள் பார்த்தனர். அதேசமயம் பா.ஜ.கவின் இரட்டை எஞ்சின் அரசு பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது. அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அவரது வீட்டை புதுப்பிக்க கோடிக்கணக்கில் செலவு செய்ததாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. மத்திய தணிக்கை ஆய்வு அறிக்கையில் முதல்வரின் இல்லத்தை புதுப்பிக்க 7.91 கோடி என்று மதிப்பிட்டு இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு பணி ஆர்டர் வழங்கப்பட்டபோது அத்தொகை 8.62 கோடியாக அதிகரிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை இப்பணிகளை 2022ம் ஆண்டு முடித்தபோது ரூ.33.66 கோடி செலவானது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பா.ஜ.க சீஷ் மஹால் என்று விமர்சித்தது. அதாவது அர்விந்த் கெஜ்ரிவால் தனது இல்லத்தை கோட்டை போன்று மாற்றியதாக குற்றம் சாட்டியது.
அதேசமயம் ஆ,ம் ஆத்மி கட்சி பிரதமர் நரேந்திர மோடி ஆடம்பரமாக வாழ்வதாக குற்றம் சாட்டியது. ஆனாலும் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாக கூறிவிட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து சொந்த வீட்டை புதுப்பிப்பதாக பா.ஜ.க பிரசாரம் செய்தது மக்கள் மத்தியில் எடுபட ஆரம்பித்தது. அதற்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபானக்கொள்கை முக்கிய காரணமாகும். இந்த மதுபானக்கொள்கை மூலம் டெல்லியை குடிகார நகரமாக ஆம் ஆத்மி கட்சி மாற்றிவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. புதிய கொள்கையின் படி ஒரு பாட்டில் வாங்கினால் மற்றொரு பாட்டில் இலவசம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இது பின்னர் ரத்து செய்யப்பட்டாலும், இக்கொள்கை மூலம் மது பானம் தயாரிப்பவர்களிடமும், வினியோகஸ்தர்களிடமும் ஆம் ஆத்மி கட்சி கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருப்பதை டெல்லி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.