ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம் வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் சந்திரபாபு என்பவரின் மகன் சக்திவேல். இவா் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேட்டு வயல் கிராமத்தை சோ்ந்த ராஜேஷ்குமாா் (37)என்பவரிடம் 15 லட்சம் கடன் வாங்கி தலைமறைவாக உள்ளாா்.
இந்நிலையில் ராஜேஷ் குமாா், சக்திவேல் வீட்டிற்கு வந்து அவரது தம்பி பிரகதீஸிடம் தகராரில் ஈடுபட்டுள்ளாா்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ராஜேஷ்குமாா் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் பிரகதீஸை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் வாட்டாத்தி கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து ராஜேஷ் குமாரை கைது செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் குற்றவாளியான ராஜேஷ் குமாா் கந்துவட்டி தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவரின் வீட்டை சோதனை செய்ததில் 29 இருசக்கர வாகனமும், 3 நான்கு சக்கர வாகனமும், 75 ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.