ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககம் திட்டம்: அம்பை வட்டார விவசாயிகள் தரவுகள் சேகரிப்பு
அம்பாசமுத்திரம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து இணைய தளத்தில் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி மாநிலம் முழுவதும் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககம் திட்ட செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த திட்டப் பலன்களை வழங்கும் 24 துறைகளை ஒன்றிணைத்து இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டப் பலன்களும் விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதன் மூலம் அனைத்துத் துறை பலன்களையும் மானியங்களையும் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.
விவசாயிகள் அரசு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் அது தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை இதன் மூலம் உறுதிபடுத்திட முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகளை சேகரிக்கும் பணி வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் மற்றும் மகளிா் திட்ட மனிதவள பயிற்றுநா்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நில விவரங்களுடன் விவசாயிகள் பதிவு விவரம் , நில உடைமை வாரியாக புவி சாா்பு குறியீடு செய்த பதிவு மின்னணு பயிா்ப் பதிவு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. விவசாயிகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.
எனவே அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவணங்கள், சுய விவரங்கள், ஆதாா் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் விவசாயிகள் தங்களது கிராமங்களில் தரவு சேகரிக்கும் முகாம் நடைபெறும் நாள்களில் பதிவு செய்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.