மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிர...
ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறல்; கீழே தள்ளிவிட்ட நிர்வாண இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள கந்தம்பாளையம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
தனது கணவருடன் வீட்டிலேயே டி-சர்ட் தைக்கும் டைலரிங் வேலைச் செய்து வரும் அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் அந்தப் பெண்.
இந்த நிலையில், சித்தூரில் வசிக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக பிப்ரவரி 6-ம் தேதியான நேற்று காலை 6.40 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி... பின்னால் உள்ள பெண்களுக்கான பொதுப்பெட்டியில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறார். அப்போது அந்தப் பெட்டியில் 7 பெண்கள் இருந்திருக்கின்றனர். இதனால், மிகத் தைரியமாக கர்ப்பிணி பெண்ணும் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷனுக்கு ரெயில் வந்தபோது அந்தப் பெட்டியில் இருந்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனராம். இதனால் கர்ப்பிணி மட்டுமே இருந்ததை பார்த்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் ரயில் புறப்பட்ட உடன் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறியிருக்கிறான். அப்போது அந்த நபரை `கீழே இறங்குங்கள். இது லேடிஸ் பயணிக்கும் பெட்டி’ என கர்ப்பிணி சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த ஆண், `அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இறங்கிடுறேன்’ என்று சொல்லியிருக்கிறான்.
பயணிகள் வேறு யாரும் இல்லாததை உறுதி செய்துகொண்ட அந்த இளைஞன் ரெயில் புறப்பட்ட பிறகு அங்கும் இங்குமாக நடந்துகொண்டு கர்ப்பிணி பெண்ணிடம் நெருங்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான். இதையடுத்து, கழிவறைக்குச் சென்றவன் திடீரென சட்டை, பேண்ட்டை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக வந்து நின்றிருக்கிறான். அச்சமடைந்த கர்ப்பிணி, கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அப்போது, கர்ப்பிணியை அடித்து தாக்கிய அந்த படுபாதகன், கர்ப்பிணியின் உடைகளை களைய முயன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட மிரட்டியிருக்கிறான்.
தன்னை தற்காத்து கொள்வதற்காக கர்ப்பிணி அவனை எட்டி உதைத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கொடூரன் கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறான்.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே காயமடைந்த நிலையில் கர்ப்பிணி பெண் விழுந்து கிடந்தார். அவரைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பமாக இருந்ததால் அதுதொடர்பான பாதிப்புகள் ஏதேனும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறதா எனவும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். ஜோலார்பேட்டை ஜங்ஷனில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, புளு கலர் டி-சர்ட், பிரவுன் கலர் பேண்ட் அணிந்திருந்த இளைஞன் பெண்கள் பெட்டியில் ஏறியதை அடையாளம் கண்டனர். அந்தக் கொடூரன் கே.வி.குப்பம் அருகிலுள்ள நாகல்ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் எனத் தெரியவந்திருக்கிறது. இன்று காலை அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிடிபட்ட ஹேமந்த்ராஜ் மீது 3 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அருகே ரயிலில் சென்ற இளம் பெண்ணை தாக்கி செயின், செல்போன் பறித்துகொண்டு அவரை கீழே தள்ளிய வழக்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் மீறிய உறவில் சென்னை பெண் ஒருவரையும் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகவும், ஒரு முறை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs