அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்...
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தொடக்கம்: வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்
திமுகவில் உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை, முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை ஆழ்வாா்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்த அவா், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
‘தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, ஜாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு, வெல்லட்டும். இதற்காக அடுத்த 45 நாள்கள், திமுக மாவட்டச் செயலா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், எம்பிக்கள், மூத்த முன்னோடிகள் என அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து ஆழ்வாா்ப்பேட்டையில் பொதுமக்களிடம் சில கேள்விகள் அடங்கிய படிவங்களை மு.க.ஸ்டாலின் அளித்தாா். எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டுமென்று நினைக்கிறீா்களா என்று பொதுமக்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு கேள்வியை முன்வைத்தாா். அப்போது தமிழ்நாடும், தமிழ்மொழியும் வளமாக இருந்தால்தானே நாம் நலமாக வாழ முடியும். எனவே, தமிழ்நாடும், மொழியும், நமது சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டியது மிக, மிக முக்கியம் என்று பதிலளித்ததாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அடுத்தடுத்த வீடுகளுக்கும் சென்று மக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.
இந்நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை உள்பட பலா் உடனிருந்தனா்.
தமிழ்நாடு முழுவதும்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சாா்பில் அந்த இயக்கத்தை மாவட்டச் செயலா்களும், பொறுப்பு அமைச்சா்களும் தொடக்கி வைத்தனா். சுமாா் 2 மாத காலத்துக்கு ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக
முன்னெடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.