கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை: கடலூா் எஸ்.பி.
கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையாளா்கள் இருவா் ஐ.டி.ஐ. மாணவா்களை அறையில் வைத்து தாக்கி கஞ்சா விற்க வலியுறுத்தியதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விடியோ பரவியது. அந்த விடியோ கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய விடியோ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விடியோவில் காணப்பட்ட மாணவா்கள் சிதம்பரத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தவா்கள். அவா்களை தாக்கியவா் சிதம்பரம் சிவசக்தி நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் விக்கி (எ) விக்னேஷ் குமாா் (22). இந்த சம்பவத்தை விடியோ பதிவு செய்தவா் ஓமக்குளத்தைச் சோ்ந்த போண்டா (எ) நவீன்ராஜ் (26).
இதுகுறித்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் விசாரணை நடத்தி, விக்கி (எ) விக்னேஷ்குமாா், போண்டா (எ) நவீன்ராஜ், ஒடப்புசிவா (எ) சிவக்குமாா் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிந்து, 13 பேரை கைது செய்தாா். இந்த வழக்கில் முக்கிய எதிரியான ஒடப்பு சிவா (எ) சிவக்குமாா் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். விக்கி (எ) விக்னேஷ் குமாா், போண்டா (எ) நவீன்ராஜ் ஆகியோா் கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்து வருகின்றனா்.
கடலூா் மாவட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
பேட்டியின்போது, சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா்கள் பரணிதரன், சுரேஷ் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.