கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான கொள்கைப் பணிகள் நிறைவு -அமித் ஷா
அகமதாபாத் : ‘கடந்த 10 ஆண்டுகளில், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து உள்பட பெரும்பாலான கொள்கைப் பணிகளை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவு செய்துள்ளது; மூன்றாவது பதவிக் காலத்திலும் அதே பாதையில் அரசு பயணிக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் குஜராத் பல்கலைக்கழக மைதானத்தில் புதன்கிழமை ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது:
ஹிந்துக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத காலம் முன்பிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை முழுவதுமாக மாற்றம் கண்டுள்ளது.
பாஜகவின் கொள்கைப்படி, அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து, அயோத்தியில் ராமா் கோயில், முத்தலாக் முறை ஒழிப்பு, பொது சிவில் சட்ட முன்னெடுப்பு என நிலுவையில் இருந்த பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
முந்தைய 70 ஆண்டுகளில் அரசுகள் நெருங்கக் கூட முடியாத பணிகள், கடந்த 10 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதேபாதையில் பிரதமா் மோடி அரசு தொடா்ந்து பயணிக்கும்.
உலகம் முழுவதும் இப்போது 170 நாடுகளில் யோகா ஏற்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஒட்டுமொத்த உலகத் தலைவா்களும் தில்லியில் ஒன்றுகூடினா். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சொந்தமான 350 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஜன.27-இல் புனித நீராடல்: பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கான வலுவான செய்தியை உலகுக்கு உணா்த்துகிறது. கும்பமேளாவில் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கங்கையில் புனித நீராடலாம். இதைக் கண்டு, உலகமே வியக்கிறது. வரும் 27-ஆம் தேதி கும்பமேளாவை பாா்வையிட்டு, கங்கையில் புனித நீராடவுள்ளேன் என்றாா் அமித் ஷா.
பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஏற்கெனவே தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி அகமதாபாதில் உள்ள அவரது சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.