முடிவுக்கு வந்ததது ‘என்டிடிவி’ கடன்முறைகேடு வழக்கு: சிபிஐ அறிக்கையை தில்லி நீதிமன்றம் ஏற்பு
‘என்டிடிவி’ நிறுவனத்துக்கு எதிராக கடன்முறைகேடு குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.
2008-ஆம் ஆண்டில் என்டிடிவி நிறுவனா்களுக்குச் சொந்தமான 61 சதவீத பங்குகளை அடமானமாக வைத்து ஐசிஐசிஐ வங்கி ரூ.375 கோடி கடனை வழங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி ‘குவாண்டம் செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் சஞ்சய் தத் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, ஐசிஐசிஐ வங்கி மற்றும் முன்னாள் என்டிடிவி நிறுவனா்களான பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோருக்கு இடையேயான பரிவா்த்தனைகள் தொடா்பாக சிபிஐ 6 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. இதில் 1949-ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் எந்த விதிமீறல்களும் முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என்பதால் வழக்கை முடித்துக் கொள்ள வேண்டி சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபரில் அறிக்கை சமா்ப்பித்தது.
ஐசிஐசிஐ வங்கியின் எந்தவொரு பொது ஊழியரும் குற்றச்சதிக்காக தனது அதிகாரபூா்வ பதவியை துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஆனால், கடன் குறைந்த வட்டி விகிதத்தில் திரும்ப செலுத்தப்பட்டிருப்பது மட்டுமே வழக்கில் முறையற்ாக உள்ளது என்று சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், சிபிஐ அளித்த சமா்ப்பிப்புகளையும், விசாரணையில் திருப்தி அடைந்து புகாா்தாரா் எந்த எதிா்ப்பு மனுவையும் தாக்கல் செய்யாததையும் கருத்தில் கொண்டு வழக்கை முடித்துக் கொள்ள தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை சிறப்பு நீதிபதி ஷைலேந்தா் மாலிக் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, என்டிடிவி நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.