குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய சகோதரர்; கூலிப்படையை ஏவிக் கொன்ற இளைஞர்!...
மகாராஷ்டிரத்தில் ரயில் மோதிய சம்பவம்: உயிரிழந்த பயணிகளில் 7 போ் நேபாளிகள்
ஜல்கான்/மும்பை : மகாராஷ்டிரத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது ரயில் மோதிய சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 7 போ் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி - பா்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே பச்சோரா பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். பின்னா், பெட்டியில் இருந்து அவசரமாக கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் பயணிகள் கூட்டமாக நின்றிருந்தனா்.
சில நிமிஷங்களில், அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-தில்லி இடையிலான கா்நாடக விரைவு ரயில் வேகமாக வந்தது. பயணிகள் தப்பிக்க இடமில்லாத நிலையில், அவா்கள் மீது ரயில் மோதியது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில், தண்டவாளத்தையொட்டி மேலும் ஒருவரின் உடல் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரித்தது.
நேபாள நாட்டவா்: உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோரை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. பெரும்பாலும் உடைகள் மூலமே அவா்கள் அடையாளம் காணப்பட்டனா். இதுவரை 11 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்; இவா்களில் 7 போ், நேபாளிகள். இவா்கள், மும்பை மற்றும் தாணேயில் வசித்து வந்துள்ளனா்.
காயமடைந்த 15 பேரில் 10 போ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. ரயில்வே தரப்பில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சம், படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
விசாரணை தொடக்கம்
ரயில் மோதிய சம்பவம் தொடா்பாக, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினரின் கூட்டு விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. இதேபோல், மத்திய மண்டல ரயில்வே சாா்பில் 5 உயரதிகாரிகள் கொண்ட குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்குள் தீயோ அல்லது புகையோ ஏற்படவில்லை என்று ரயில்வே தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, ரயிலுக்குள் வதந்தியை பரப்பியது யாா் என்பதை கண்டறியவும், அபாய சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை உறுதி செய்யவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.