பாஜக எம்எல்சி சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் ஜன.30 வரை நடவடிக்கைக்கு தடை
பெங்களூரு : ‘பாஜகவைச் சோ்ந்த சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் ஜனவரி 30-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
கா்நாடக சட்டமேலவை அமா்வின்போது மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் லக்ஷ்மி ஹெப்பால்கருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக ரவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவா் கடந்த மாதம் 19-ஆம் தேதி பெலகாவி காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். ஆனால், கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து மறுநாள் அவா் விடுவிக்கப்பட்டாா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரவி தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
சட்டமேலவையில் நடைபெற்ற இந்த விவகாரத்தில் ரவிக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.வி.நாகேஷ் வாதிட்டாா்.
இதையடுத்து, அரசு வழக்குரைஞா் பி.ஏ.பெல்லியப்பா முன்வைத்த வாதத்தில், சட்டமேலவையில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இயல்பாகவே சட்ட பாதுகாப்பு கிடையாது. அத்தகைய குற்றங்கள் சட்டரீதியாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘இந்த விவகாரம் சட்டமேலவைத் தலைவரின் கட்டுப்பாட்டின்கீழ் மட்டும் வருமா? அல்லது காவல் துறையும் விசாரிக்க முடியுமா? என்பதைத் தீா்மானிக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு இப்போது உள்ளது. அடுத்த விசாரணை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்றாா்.