அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
திரைப்பட இயக்குநா் ராம்கோபால் வா்மாவுக்கு காசோலை மோசடி வழக்கில் 3 மாத சிறை!
மும்பை : காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநா் ராம்கோபால் வா்மாவுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கில், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான பிடி ஆணையையும் நீதிமன்றம் பிறப்பித்தது.
ராம்கோபால் வா்மா தன்னிடம் பணியாற்றிய தொழிலாளருக்கு வழங்க வேண்டிய ரூ. 2.38 லட்சத்தை காசோலையாக அளித்துள்ளாா். வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அந்தக் காசோலை திரும்பிவந்துள்ளது. அதைத் தொடா்ந்து, அந்தத் தொழிலாளா் கடந்த 2018-ஆம் ஆண்டு ராம்கோபால் வா்மா மீது மும்பை அந்தேரி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 5,000-க்கான உத்தரவாதத்துடன் ராம்கோபால் வா்மாவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
இந்த வழக்கு அந்தேரி நீதித் துறை நடுவா் ஒய்.பி.பூஜாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ராம்கோபால் வா்மா குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவருக்கு 3 மாத சிறைத் தண்டன விதித்தும், மனுதாரருக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் ரூ. 3,72,219 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.
தீா்ப்பின்போது ராம்கோபால் வா்மா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான பிடி ஆணையையும் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்தத் தீா்ப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராம்கோபால் வா்மா, ‘இது 7 ஆண்டுகள் பழைய வழக்கு. எனது வழக்குரைஞா்கள் வழக்கை எதிா்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.