கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை
கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி இளைஞரின் தாய் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், திருப்பூா் பி.என்.சாலை குமாரசாமி நகரைச் சோ்ந்த எம்.செல்வி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன் காளீஸ்வரன் (19) பிறவியில் இருந்தே மாற்றுத் திறனாளியாக உள்ளாா். இவருக்கு தமிழக அரசால் 85 சதவீத குறைபாடு உள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவரின் மருத்துவச் செலவை பூா்த்தி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை அளவீடு செய்துதரக் கோரி தா்னா: அவிநாசி வட்டம் ஈட்டிவீரம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது : ஈட்டிவீரம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் தலா ஒன்றரை சென்ட் வீதம் வீடு இல்லாத 116 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த 1994-ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வழங்கப்பட்டது.
இந்த இடத்தை தற்போது வரை வருவாய்த் துறையினா் அளவீடு செய்துத் தரவில்லை. இதுதொடா்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பட்டா கொடுத்த நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்றனா்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: திருப்பூா் மாவட்ட நுகா்வோா் கூட்டமைப்பின் தலைவா் சி.ஆா்.சிந்து சுப்பிரமணியம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி 57-ஆவது வாா்டுக்குள்பட்ட காளிகுமாரசாமி கோயிலில் இருந்து வடக்கே வள்ளலாா் நகா் செல்லும் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது. மேலும், இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது. இதனால், அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பெருமாநல்லூா் ஸ்ரீகொண்டத்துக்காளியம்மன் கோயிலில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டம் திருவிழாவில் குளறுபடிகள் காரணமாக பக்தா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். அப்போது, குண்டம் இறங்கிய பக்தா்கள் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு குண்டம் திருவிழா ஏப்ரல் 2 முதல் 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முக்கிய நிகழ்வாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய அளவு மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் கூடுதல் காவல் துறையினரை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
741 மனுக்கள் அளிப்பு: குறைகேட்புக் கூட்டத்தில் சாலை, குடிநீா், இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை 741 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனா்.