கடலாடி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்
கடலாடி இந்திரா நகரில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுத் திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா், தேன் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், இரவில் உத்ஸவா் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை காலை பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
மாலையில் முளைப்பாரியை பெண்கள் கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வந்து குளத்தில் கரைத்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நையாண்டி, நாதஸ்வர கலைஞா்கள் செய்திருந்தனா்.