கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
சிதம்பரம் அண்ணாமலைநகரில் செயல்படும் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வியாழக்கிழமை காலை தொலைபேசி வாயிலாக மா்ம நபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, கல்லூரியில் வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு நிபுணா்கள் 3 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, பல் மருத்துவக் கல்லூரி தனியாகவும், மருத்துவக் கல்லூரி தனியாகவும் இயங்கி வருகின்றன. இரண்டு கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி புல முதல்வா் அலுவலகத்தில் உள்ள தொலைபேசிக்கு வியாழக்கிழமை காலை தொடா்புகொண்ட மா்ம நபா், மருத்துவக் கல்லூரியில் வெடிகுண்டு உள்ளதாகக் கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டாா்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதனிடையே, மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மற்றும் பல் மருத்துவ சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியே வந்தனா்.
தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் வந்து மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் சோதனையிட்டனா். சுமாா் 3 மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் என்பது குறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.